Saturday, April 12, 2014

1 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்:

1 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்: 
தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் ஐயங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.
தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்ருடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
உயிரெழுத்துக்கள்

ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
அ-அகரம்
ஆ-ஆகாரம்
இ-இகரம்
ஈ-ஈகாரம்
உ-உகரம்
ஊ-ஊகாரம்
எ-எகரம்
ஏ-ஏகாரம்
ஐ-ஐகாரம்
ஒ-ஒகரம்
ஓ-ஓகாரம்
ஒள-ஓலைகரம்
ஃ-அஃகேனம்
மெய்யெழுத்துக்கள்

கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன.
க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் -
மெய்யெழுத்துக்கள்
உயிர் மெய்யெழுத்துக்கள்

முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்துக் காட்டப்பட்டுள்ளது.
உயிர்மெய்யெழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ

ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்
உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறும், அவை முறையே வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் ஆகும்.
அதாவது வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசையாம் க, ச, ட, த, ப, ற என்பவை வல்லினமாகவும்.
வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி ஒலிக்கவும், மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசையாம் ய, ர, ல, வ, ழ, ள
என்பவை இடையினமாகவும்.
மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசையாம் ஞ, ங, ந, ண, ம, ன என்பவை மெல்லினமாகவும் அழைக்கப்படுகின்றன.
குறில் எழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.
நெடில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.
சார்பெழுத்துகள்

உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
உயிர்மெய் எழுத்து

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
ஆய்த எழுத்து

'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை கானலாம.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும்.

இதுவே ஒற்றளபெடை ஆகும்.
வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.
குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
பந்து என்னும் சொல்லில் கடிசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே
ஒலிப்பதை காணலாம்.
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

ஐகாரக்குறுக்கம்.

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்
ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
வலையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.
ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
ஔவை
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
குறிப்பு:
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.
மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
வரும் வண்டி
தரும் வளவன்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இவ்வாறு குறைந்தொலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.
ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.
எ.கா.: முள் + தீது = முஃடீது
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்
மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
இதுவரையில் நாம் பார்த்தவை அனைத்தும் எழுத்திலக்கணம் சார்ந்தவைகளாகும், இதனை முழுமையாக புரிந்துணர்ந்த பின்னர் நாம் சொல் இலக்கணம் பற்றிய புரிதலுக்கு செல்வோம்.

சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது ொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
எ.கா:
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்
இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள்
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள்
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள்
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள்
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள்
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள்
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள்
வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.
முற்று இருவகைப்படும். அவை
1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
1.பெயரெச்சம்
2.வினையெச்சம்
தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று
ஆகும்.
எ.கா: அவன் பொன்னன்.
எச்சம்
பெயரெச்சம்
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
எ.கா: படித்த மாணவன்
வினையெச்சம்
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
எ.கா: படித்துத் தேறினான்
இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ
என்னும் சுட்டுக்களும்; யா முதலிய
வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று
கூறப்படும்.
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும்
இடைச்சொற்களாகும்.
எ.கா:
அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.
உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்
1.ஒரு பொருள் குறித்த பல சொல்
2.பல பொருள் குறித்த ஒரு சொல்
எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
சாலப் பேசினான்.
உறு புகழ்.
தவ உயர்ந்தன.
நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
பல பொருள் குறித்த ஒரு சொல்

கடிமனை - காவல்
கடிவாள் - கூர்மை
கடி மிளகு - கரிப்பு
கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்
பொருள் இலக்கணம்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,
அகப்பொருள்
புறப்பொருள்
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும், அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை தவிர்த்து கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

No comments:

Post a Comment