Saturday, April 12, 2014

அணி இலக்கணம்

அணி இலக்கணம்
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம். 
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,
பொருள் அணிகள்
1. அதிசய அணி
2. அவநுதியணி
3. ஆர்வமொழியணி
4. இலேச அணி
5. உதாத்த அணி
6. ஏது அணி
7. ஒட்டணி
8. ஒப்புமைக் கூட்ட அணி
9. ஒழித்துக்காட்டணி
10. சங்கீரண அணி
11. சமாகித அணி
12. சிலேடையணி
13. சுவையணி
14. தற்குறிப்பேற்ற அணி
15. தன்மேம்பாட்டுரை அணி
16. தன்மையணி
17. தீவக அணி
18. நிதரிசன அணி
19. நிரல்நிறையணி
20. நுட்ப அணி
21. பரியாய அணி
22. பரிவருத்தனை அணி
23. பாவிக அணி
24. பின்வருநிலையணி
25. புகழாப்புகழ்ச்சி அணி
26. புணர்நிலையணி
27. மயக்க அணி
28. மாறுபடுபுகழ்நிலையணி
29. முன்ன விலக்கணி
30. வாழ்த்தணி
31. விசேட அணி
32. விபாவனை அணி
33. விரோக அணி
34. வேற்றுப்பொருள் வைப்பணி
35. வேற்றுமையணி
சொல் அணிகள்
1. எதுகை
2. மோனை
3. சிலேடை
4. மடக்கு
5. பின்வருநிலை
6. அந்தாதி
1. இரட்டுறமொழிதல் அணி
2. இல்பொருள் உவமையணி
3. உயர்வு நவிற்சி அணி
4. உருவக அணி
5. உவமையணி
6. எடுத்துக்காட்டு உவமையணி
7. தன்மை நவிற்சி அணி
8. பிறிது மொழிதல் அணி
9. வஞ்சப் புகழ்ச்சியணி

தன்மை நவிற்சி அணி – இயல்பு நவிற்சி அணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது. இது இயல்பு நவிற்சி அணி எனவும் கூறப்படும்.
• உள்ளம் குளிர்ப்ப – நெஞ்சம் குளிர
• ரோமம் சிலிர்க்க – ரோமம் சிலிர்க்க
• உரை தள்ள – வார்த்தை வராமல் தடுமாற
• விழிநீர் அரும்ப – விழிநீர் சிந்த
• தன்னையே மறந்து நின்றாள் – தன்னை மறந்து நின்றாள்
இங்கு எந்த உவமானமோ, அன்றி உவமேயமோ, அல்லது மிகைப்படுத்தலோ இல்லாததைகக் காண முடிகிறது.
• உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும்
• மிகைப்படுத்தல் இருக்காது
• உதாரணம் இருக்காது
• உருவகப் படுத்தல் இருக்காது
• சொல்வதில் அணிக்கேயுரிய அழகு காணப்படும்
எ.கா.1
இருந்து முகந் திருத்தி
ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
வருந்தி ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்
இக்கவிதை வரிகளில் உருவக அணியோ அன்றி உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.

உவமையணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
“பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்

உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவம உருபுகள்
ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்:போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
(எ.கா.) உவம உருபு – தொடர்
1. போல – கிளி போலப் பேசினாள்.
2. புரைய – வேய்புரை தோள்.
3. ஒப்ப – தாயொப்ப பேசும் மகள்.
4. உறழ – முறவு உறழ் தடக்கை.
5. அன்ன – மல்ரன்ன சேவடி.
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே.

உருவக அணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது உவமை அணியின் மறுதலை.
விதி:
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமகும்”.
எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.
• பச்சை மாமலை போல் மேனி – இது உமை அணி.
• மையோ மாமலையோ மறிகடலோ – இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
எடுத்துக் காட்டுகள்
• உவமை அணி – மதிமுகம் (மதி போன்ற முகம்)
• உருவக அணி – முகமதி (முகம்தான் மதி)
• உவமை அணி – புலி போன்ற வீரன் வந்தான்
• உருவக அணி – புலி வந்தான்
• உவமை அணி – மலர்க்கை (மலர் போன்ற கை)
• உருவக அணி – கைமலர் (கைகள்தான் மலர்)
• உவமை அணி – வேல்விழி (வேல் போன்ற விழி)
• உருவக அணி – விழி வேல் (விழிதான் வேல்)
1. தொகையுருவகம்
2. விரியுருவகம்
3. தொகைவிரியுருவகம்
4. இயைபுருவகம்
5. இயைபிலியுருவகம்
6. வியனிலையுருவகம்
7. சிறப்புருவகம்
8. விரூபக உருவகம்
9. சமாதான உருவகம்
10. உருவக உருவகம்
11. ஏகாங்க உருவகம்
12. அநேகாங்கயுருவகம்
13. முற்றுருவகம்
14. அவயவ உருவகம்
15. அவயவி உருவகம்
என 15 வகைப்படும்.

பின்வருநிலையணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.
இது மூன்று வகைப்படும்:
• சொல் பின்வருநிலையணி
• பொருள் பின்வருநிலையணி
• சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.
எ.கா:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
--திருக்குறள (592)
இக்குறட்பாவில் ‘உடைமை’ என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
எ.கா:
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
--திருக்குறள் (299)
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

தற்குறிப்பேற்ற அணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
எ.கா:
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா:
தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
நளவெண்பா
விளக்கம்:
நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா:
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
பாதகனை பார்க்கப் படாதேன்றோ – நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.
நளவெண்பா
விளக்கம்:
நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்(“அலவன்”) தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியை காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கிறன என்கிறார்.
18NOV
வஞ்சப் புகழ்ச்சியணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
புகழ்வது போல் இகழ்தல்
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
திருக்குறள் - திருவள்ளுவர்
“கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்” என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
இகழ்வது போல் புகழ்தல்
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புறநானூறு பாடியவர்: கபிலர்
“புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது” என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

வேற்றுமை அணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
‘திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசுறின்’
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.

இல்பொருள் உவமையணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.
இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி
அணி இலக்கணம், தமிழ் இலக்கணம்.
எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும். இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.

No comments:

Post a Comment