Saturday, April 12, 2014

PART 2 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்

PART 2 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்
யாப்பு இலக்கணம்
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்

எழுத்து 
அசை 
சீர் 
தளை 
அடி
தொடை

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் த்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது

நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும் நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.
அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

*தண்மை அணி
*உவமையணி
*உருவக அணி
*பின்வருநிலையணி
*தற்குறிப்பேற்ற அணி
*வஞ்சப் புகழ்ச்சியணி
*வேற்றுமை அணி
*இல்பொருள் உவமையணி
*எடுத்துக்காட்டு உவமையணி
கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ juu, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j
ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shuu, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh
ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Suu, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S
ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ huu, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h
க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshuu, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh

1. தமிழ் எழுத்துக்கள்

உயிரெழுத்து: அ, ஆ - இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. நமது உயிர், மெய்யின் (உடம்பின்) உதவியில்லாமல் தானே இயங்குகின்றது. அதுபோலவே இயங்கும் அ, ஆ, முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும். ( அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - உயிர் எழுத்துக்கள் 12. )

மெய்யெழுத்து: க், ங் - `இக்', `இங்' என உச்சரிக்கப்படும்: `க்' என்னும் எழுத்தை உச்சரிக்க உயிரெழுத்தின் உதவி தேவைப்படுகிறது. நமது மெய் (உடம்பு) இயங்குவதற்கு உயிர் தேவைப்படுவது போல `க்' முதலிய எழுத்துக்களை உச்சரிக்க உயிர் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் `க்' முதலிய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்று சொல்லப்படும். ( க், ங், ச், ஞ் ட், ண், த் ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - மெய்யெழுத்துக்கள் 18. ) உயிர்மெய் எழுத்து: க என்னும் எழுத்தில் `க்' என்னும் ஒலியும், `அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - `க்' என்னும் மெய்யும் `அ' என்னும் உயிரும்
கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18*12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. ( க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12; இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216. )

ஆய்த எழுத்து: ("ஃ" இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த
எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டில்அ, இ, உ, எ, ஒ, என்னும் ஐந்தும் குறுகிய ஓசையுடையவை. ஆதலால் இவை குறில் எனப்படும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையவை. ஆதலால் இவை நெடில் எனப்படும். பதினெட்டு மெய்யெழுத்துக்களுள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறும் வலிய ஓசையுடையவை: ஆதலால் இவை வல்லினம் எனப்படும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை; அதனால் இவை மெல்லினம் எனப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடைத்தர ஓசையுடையவை; ஆதலால் இவை
இடையினம் எனப்படும்.

2. ஒலி வேறுபாடும் பொருள் வேறுபாடும் (1) ர, ற

அரம், மரம் - இவற்றிலுள்ள ரகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயைத் தடவுதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது என அறியலாம்.
வரம், கரி, கரை, குரவர் - இவற்றை உச்சரித்துப் பாருங்கள். அறம், மறம் - இவற்றில் வந்துள்ள றகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் ற பிறக்கின்றமையை அறியலாம். இவ்வாறு இவை (ர- ற) பிறக்கும் முயற்சியில் வேறுபடுதலால்தான் உச்சரிப்பிலும் இவை வேறுபடுகின்றன. இவை உச்சரிப்பில் வேறுபடுதல் போலவே பொருளிலும் வேறுபடும்.
ர ற
அரம் - ஒரு கருவி அறம் - தருமம்
மரம் மறம் - வீரம்
இரை - உணவு இறை - தலைமை, வரி
கரி - யானை கறி - பதார்த்தம்
கரை - அணை கறை - அழுக்கு
திரை - அலை திறை - கப்பம்
பரவை - கடல் பறவை - பட்சி
மாரி - மழை மாறி - வேறுபட்டு
விரல் - ஓர் உறுப்பு விறல் - வலிமை, திறமை
இவ்வாறு இவை உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இரண்டையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது. (2) ந,ன, ண நகம், நண்டு - இவற்றில் வந்துள்ள நகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. கந்தன், பந்தம் என்று இதனையடுத்துப் பெரும்பாலும் `த' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் இந்நகரம் தகரத்தை அடுத்திருத்தலாலும் இது தந்நகரம் எனப்படும்.

கன்று, நன்று - இவற்றில் வந்துள்ள னகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. மன்று, சென்று என இதனையடுத்துப் பெரும்பாலும் `ற' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் இறுதியில் றகரத்தை அடுத்து இந்த னகரம் இருத்தலாலும் இது றன்னகரம் எனப்படும். பணம், மணல் - இவற்றில் வந்துள்ள ணகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாய் நுனியைச் சேர்தலால் இந்த ண பிறக்கின்றது. நண்டு, வண்டு, கண்டம் எனப் பெரும்பாலும் இதனையடுத்து டகரம் வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் டகரத்தை அடுத்து இந்த ணகரம் அமைந்திருத்தலாலும் இது டண்ணகரம் எனப்படும். இவை மூன்றும் இங்ஙனம் பிறக்கும் முயற்சியில் வேறுபடுவதால், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும்.

ந ன ண
நான் - பேசுவேன் நாண் - கயிறு
ஆன் - பசு ஆண் - ஆடவன்
ஆனை - யானை ஆணை - கட்டளை
கனி - பழம் கணி - சோதிடம்
பனி - குளிர்ச்சி பணி - வணங்கு

இவை இவ்வாறு உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இம்மூன்றையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது.

ல, ள, ழ

கலம், பலம் - இவற்றில் உள்ள லகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் ல பிறக்கின்றது. குளம், குள்ளன் - இவற்றில் உள்ள ளகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாயைத் தடித்துத் தடவுதலால் ள பிறக்கின்றது. பழம், மழை - இவற்றில் உள்ள ழகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயைச் சிறிது அழுத்தமாகத் தடவுதலால் ழ பிறக்கின்றது. இவை மூன்றும் உச்சரிப்பில் வேறுபடுகின்றன அல்லவா? அவ்வாறே அவை பொருளிலும் வேறுபடுதலைக் காண்க:

ல ள ழ

அலை - அலைதல் அளை - வளை அழை - கூப்பிடு
கலை - ஆடை களை - நீக்கு, களைப்பு கழை - கரும்பு, மூங்கில்
காலி - ஒன்றும் இல்லாதது காளி - ஒரு பெண் தெய்வம் காழி - ஓர் ஊர்
(சீர்காழி)
தலை - உறுப்பு தளை - கட்டு தழை - செழி
வலி - வலிமை, நோதல் வளி - காற்றுழூ வழி - பாதை
விலை - விற்பனை விளை - பயிராக்கு விழை - விரும்பு

க்ஷ, ட்ச

பக்ஷம், மீனாக்ஷி, அக்ஷய பாத்திரம் - இவற்றில் வந்துள்ள க்ஷ என்னும் எழுத்து வடமொழி எழுத்து. இதற்குப் பதிலாக ஏறத்தாழ இதே உச்சரிப்பையுடைய ட்ச என்னும் இரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி பட்சம், மீனாட்சி, அட்சய பாத்திரம் என்பனபோல் எழுதுதல் தமிழர் வழக்கம். இவற்றுள் பட்சம், அட்சய பாத்திரம் என்பனவற்றைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதில் தவறில்லை. ஏனெனில் இவற்றின் பொருள் வேறுபடவில்லை. மீனாக்ஷி என்பதற்கு மீன்போன்ற கண்ணையுடையவள் என்பது பொருள்: இதைத் தமிழில் மீனாட்சி என எழுதினால் மீன் + ஆட்சி எனப் பிரியும். அக்ஷி என்னும் வட சொல்லுக்குக் `கண்ணையுடையவள்' என்பது பொருள்; ஆட்சி என்னும் சொல் ஊராட்சி, நகராட்சி என்பது போலக் காணப்படுகிறது. மீனாக்ஷி என்னும் வட சொல் தொடருக்குரிய பொருள், மீனாட்சி என்னும் தமிழ்த் தொடரில் பெறப்படவில்லை என்பது அறியற்பாலது. ஆதலால் பொருள் கெடாத வகையில் வட எழுத்துக்குச் சமமான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துதல் பொருத்தமாகும். பொருள் கெடவருமாயின், அங்கு வட எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. காட்சி - இது காண் + சி என்ற பிரிக்கப்படும். இது தமிழ்ச்சொல். இதனைப் பலர் காக்ஷி எனத் தவறாக எழுதுகின்றனர். திரைப்பட விளம்பரங்களில் இத்தவற்றைப் பெரும்பாலும் காணலாம்.

No comments:

Post a Comment